இத்தடவை தேர்தலில் யார் வெல்லுவார்கள்?

 

தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பலரும் கேட்கின்ற கேள்வி இந்த முறை யார் வெல்லுவார்?

மட்டக்களப்பு யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டங்களில் கடந்த தேர்தல் முடிவுகளை பார்த்த போது மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய முகங்களுக்கே அதிகூடிய வாக்குகளை வழங்கி வெல்ல வைத்திருக்கிறார்கள்.

யாழ்.மாவட்ட தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்திருந்தது.

முதலில் மட்டக்களப்பு மாவட்டத்தை பார்ப்போம்.

2000 ஆண்டு நிமலன் சௌந்தரநாயகம் கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். 1994ஆம் ஆண்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற ஜோசப் பரராசசிங்கம் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டார்.

2001 ஆண்டு தங்கவடிவேல் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கும் அடுத்த நிலையில் வெள்ளிமலை என அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை அவர்களும் மூன்றாம் இடத்திற்கு ஜோசப் பரராசசிங்கமும் வந்திருந்தார்.

2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் அவர்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தியிருந்த தேர்தல். கனகசபை அவர்கள் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். அந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் புதியவர்கள். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜோசப் பரராசசிங்கம் தோல்வியடைந்தார்.

2010ஆம் ஆண்டு யோகேஸ்வரன் அவர்கள் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன் ஆகியோர் அதற்கு அடுத்த நிலையில் விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.

2015ஆம் ஆண்டு ஞா.சிறிநேசன் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருந்தார். அடுத்த நிலையில் வியாழேந்திரன் வந்திருந்தார். ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் மூன்றாம் இடத்திற்கு வந்து வெற்றி பெற்றார்.

கடந்த 20 வருட தேர்தல் முடிவுகளை அவதானிக்கின்ற போது ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களைவிட புதியவர்களை தெரிவு செய்வோம் என்ற மனநிலை மட்டக்களப்பு மக்கள் மத்தியில் மேலோங்கி இருப்பதை மறுப்பதற்கு இல்லை.

அவ்வாறானால் கடந்த 20 வருடங்களை போல இம்முறையும் புதிய ஒருவரையே அதி கூடிய விருப்பு வாக்கில் மட்டக்களப்பு மக்கள் தெரிவு செய்வார்களா?

2020 தேர்தலில் தெரிவு செய்யப்படப்போகும் புதியவர் யார்?

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை தமிழர் தரப்பில் வெற்றி பெறக் கூடிய தமிழ் கட்சிகளாக இரு கட்சிகள் உள்ளன.

1.தமிழரசுக்கட்சி ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு )

2.தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ( பிள்ளையான் குழு )

முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியாக

  1. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ்.

தேசியக் கட்சிகளாக மூன்று கட்சிகள் உள்ளன.

1.பொதுஜன பெரமுன ( வியாழேந்திரன் தலைமையிலான தமிழ் வேட்பாளர்களை கொண்ட அணி.

2.சிறிலங்கா சுதந்திரக்கட்சி ( ஹிஸ்புல்லா தலைமையிலான அணி. இதில் மூன்று தமிழர்களும் போட்டியிடுகின்றனர்.)

3.சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி ( அமிர்அலி தலைமையிலான அணி. இதிலும் சில தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்த ஆறு கட்சிகளும் தான் 5 வீதத்திற்கு மேல் வாக்குகளை பெறப்போபவர்கள். இந்த ஆறு கட்சிகளிலிருந்து 5 பேர் தெரிவு செய்யப்படப்போகிறார்கள்.

இது தவிர செல்லாக்காசுகளாக 10 கட்சிகளும், 22 சுயேச்சைகுழுக்களும் போட்டியிடுகின்றன.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் பெயர்மாற்றப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணி. விக்னேஸ்வரன் அணி.

ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி.

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். ஆகியன இதில் குறிப்பிடத்தக்கன.

இவர்கள் அனைவரும் அளிக்கப்பட்ட வாக்கில் 5 வீத வாக்குகளை கூட பெற முடியாதவர்கள்.

ஆனால் விக்னேஸ்வரனின் கட்சி, ஆனந்தசங்கரியின் கட்சி ஆகியன கணிசமான தமிழ் வாக்குகளை பிரயோசனமற்ற வாக்குகளாக மாற்றப்போகிறார்கள். இதனால் வரப்போகும் விளைவு தமிழ் பிரதிநிதித்தும் இழக்கப்படும்.

ஆனந்தசங்கரியின் கட்சி மட்டக்களப்பில் செல்வாக்கற்ற ஒரு கட்சி. அந்த கட்சியுடன் கிழக்கு தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு இணைந்திருக்கிறது. அக்கட்சியின் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியிலில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் சந்திரா என்பவர் போட்டியிடுகிறார். இவர் ஆளுமைமிக்க பெண் என பலரும் கூறுகிறார்கள். இவரை போன்றவர்கள் மட்டக்களப்பு மக்களின் பிரதிநிதியாக வருவதை பலரும் விரும்புவார்கள். இவர் மட்டக்களப்பில் வெற்றி பெற கூடிய ஒரு கட்சியில் இணைந்து போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் இவர் போட்டியிடுகின்ற கட்சி மட்டக்களப்பில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு எங்குமே ஒரு ஆசனத்தை கூட பெற மாட்டாது.

மட்டக்களப்பில் தமிழர் பிரதிநிதித்துவத்தை தக்க வைக்க வேண்டும் என்று கூறிக்கொண்டே கிழக்கு தமிழர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இன்று வெற்றி பெற முடியாத ஒரு கட்சியில் இணைந்து கொண்டு தமிழ் வாக்குகளை பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் வேலையைத்தான் செய்ய முற்பட்டிருக்கிறார்கள்.

விக்னேஸ்வரன் கட்சியும் மட்டக்களப்பில் செல்வாக்கற்ற ஒரு கட்சி தான். அவர்களுக்கு என்று வாக்கு வங்கி தளம் கிடையாது. இந்த அணியுடன் கடந்த காலங்களில் சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சிகளில் போட்டியிட்ட கணேசமூர்த்தி போட்டியிடுகிறார். இவர்களால் சுமார் 5ஆயிரம் வாக்குகளைத்தான் பெற முடியும். இவர்களால் தமிழ் வாக்குகளை பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்ய முடியும். அவ்வளவுதான்.

கடந்த காலங்களிலும் கணேசமூர்த்தி ஐக்கிய தேசியக்கட்சியில் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை எடுத்து அமிர்அலியை வெற்றி பெற வைக்க முடிந்ததே ஒழிய இவரால் வெற்றி பெற முடியவில்லை. இம்முறையும் தமிழ் வாக்குகளை பிரித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க செய்யும் கைங்கரியத்தைதான் கணேசமூர்த்தியும் விக்னேஸ்வரனும் செய்யப்போகிறார்கள்.

தமிழ் வாக்குகள் பிரிக்கப்பட்டால் 3 தமிழர்களும் 2 முஸ்லீம்களும் வெற்றி பெறுவார்கள். தமிழ் வாக்குகள் பிரிக்கப்படாமல் தமிழர் வாக்களிப்பு வீதமும் அதிகரிக்கப்பட்டால் 4 தமிழர்கள் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

தமிழ் வாக்குகளை பிரிப்போம், தமிழர் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வோம் என கங்கணம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் விக்னேஸ்வரன், ஆனந்தசங்கரி போன்ற உதிரிக்கட்சிகளின் எண்ணம் நிறைவேறுமா என்பது மட்டக்களப்பு மக்களின் கையில் தான் இருக்கிறது.

யாழ் மாவட்டத்தை பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் விருப்பு வாக்கில் முன்னிலைக்கு வந்தவர் அடுத்த முறை பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அல்லது போட்டித்தளத்திலிருந்து காணாமல் போயிருக்கிறார்.

2001ஆம் ஆண்டு தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஆனந்தசங்கரி விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வந்திருந்தார்.

2004ஆம் ஆண்டு ஆனந்தசங்கரி சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். தொடர்ந்து இன்று வரை அவர் தோல்வியடையும் வேட்பாளராக களத்தில் நின்கிறார்.

2004ஆம் ஆண்டு ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்கைப்பெற்று வெற்றி பெற்ற செல்வராசா கஜேந்திரன் 2010ல் 500 விருப்பு வாக்குகளைக் கூட பெற முடியாது தோல்வியடைந்தார். 2010ஆம் ஆண்டு தேர்தலில் அவர் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 6ஆயிரம் தான்.

2010ஆம் ஆண்டு கூடிய விருப்பு வாக்கு பெற்ற மாவை சேனாதிராசா 2015ஆம் ஆண்டு தேர்தலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டார். 2010 ஆம் ஆண்டு 5ஆவது இடத்திற்கு வந்து வெற்றி பெற்ற சிவஞானம் சிறிதரன் 2015ஆம் ஆண்டில் யாழ். மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வந்திருந்தார்.

கிளிநொச்சி என்ற பெருந்தொகை வாக்காளர்களை கொண்ட தொகுதியில் செல்வாக்கு மிக்கவராக சிறிதரன் திகழ்கிறார். இம்முறையும் அவர் விருப்பு வாக்கில் முதலாம் இடத்திற்கு வருவார் என கூறப்படுகிறது.

அரசியலுக்கு அறிமுகமான காலம் தொடக்கம் சர்ச்சைகளுக்குள் சிக்கி அதனூடாக பிரபல்யம் பெற்று வரும் சுமந்திரன் கடந்த தேர்தலில் சிறிதரனுக்கு அடுத்ததாக 50ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.

சிறிதரன் கிளிநொச்சி தொகுதியை முழுமையாக தனது செல்வாக்கின் கீழ் வைத்திருப்பது போல பருத்தித்துறை உடுப்பிட்டி தொகுதிகளை சுமந்திரன் தனது செல்வாக்கில் வைத்திருக்கிறார். இந்த தொகுதிகளில் பிரதேச சபை தலைவர்களாக உறுப்பினர்களாக இருப்பவர்கள் சுமந்திரனால் தெரிவு செய்யப்பட்டு அரசியலுக்கு வந்தவர்கள். தனது வெற்றிக்காக இவர்கள் முழுமையாக உழைப்பார்கள் என்பது சுமந்திரனின் நம்பிக்கை. அந்த நம்பிக்கை தகருமா நிலைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சுமந்தரன் அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கியிருந்த செவ்வி மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அந்த செவ்வி எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பாரக்கவேண்டி இருக்கின்றது.

சித்தார்த்தனும் தனது தந்தையின் செல்வாக்கு மக்கள் சேவையை வைத்து யாழ் மாவட்டத்;தில் அவர் வாக்கு வங்கி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். கடந்த முறையை போல அவர் இம்முறையும் கணிசமான விருப்பு வாக்கை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, சரவணபவன், போன்ற பழையவர்களுடன் நெருக்கமான போட்டிக்களத்தில் புதியவர்களான திருமதி ரவிராஜ், ஆர்னோல்ட் ஆகியோரும் உள்ளனர். ஆர்னோல்ட் யாழ். மாநகர முதல்வராக இருந்தவர், மாகாணசபை உறுப்பினராக இருந்தவர், அது தவிர யாழ் தொகுதியில் பாசையூர், குருநகர் போன்ற பகுதிகளில் கணிசமான வாக்குகளை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருமதி ரவிராஜ் அவர்களின் வாக்கு வங்கி தளம் சாவகச்சேரி. மற்றும் பெண்கள் அமைப்புக்கள் அவருக்கு ஆதரவளிக்கலாம். காலஞ்சென்ற முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் அறிமுகம் செல்வாக்கை வைத்தே திருமதி ரவிராஜ் போட்டி களத்தில் இறங்கியிருக்கிறார்.

யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றுத்தலைமையாக தாம் களத்தில் நிற்கிறோம் என விக்னேஸ்வரன் அணியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் கூறிக்கொண்டாலும் மாற்றுத்தலைமை என்ற அளவிற்கு அவர்கள் இன்னும் மக்கள் செல்வாக்கு பெறவில்லை.

இம்முறையும் யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் அதி கூடிய வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வருவார்கள். இரண்டாம் இடத்திற்கு ஈ.பி.டி.பி வரும். ஈ.பி.டி.பி ஒரு ஆசனத்தை பெற்று டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற உறுப்பினராவார்.

மூன்றாம் இடத்திற்கு விக்னேஸ்வரன் அணி வரலாம் என்றும் ஒரு ஆசனத்தை பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாகாணசபை தேர்தலில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று தான் வெற்றி பெற்றதால் யாழ். மாவட்டத்தில் தனது கட்சியே அதி கூடிய வாக்குகளை பெற்று முதலாம் இடத்திற்கு வரும் என விக்னேஸ்வரன் நம்புகிறார். மாகாணசபை தேர்தலில் அவர் எங்கு நின்றார், அந்த விருப்பு வாக்கு எப்படி பெறப்பட்டது என்பதை அவர் ஆராந்தால் தான் இப்போது இருக்கும் இடத்தின் நிலையை புரிந்து கொள்வார்.

நான்காவது இடத்திற்கு வரப்போபவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷா அல்லது அங்கஜன் அணியா என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களை மட்டும் பெற்றால் நான்காவதாக வரப்போகும் அணிக்கு ஒரு ஆசனம் கிடைக்கும்.

கடந்த முறை ஐக்கிய தேசியக்கட்சியில் வெற்றி பெற்ற திருமதி மகேஸ்வரனால் இம்முறையும் அந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறிதான்.

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!