மே-18ஐ வீட்டிலிருந்தபடியே நினைவுகூர்தல்!

‘இன்று எமக்கு ஒரு தேசிய வீடு உண்டு. எமக்குச் சொந்தமாக ஒரு நாடு உண்டு. மிகவும் பாராட்டப்படுகின்ற வலிமையான முன்னேறிய ஒரு நாடு எமக்குண்டு’ இவ்வாறு பேசியிருப்பவர் இஸ்ரேலின் பிரதமரான நெட்டன்யாகு.

‘நாங்கள் நினைவு கூரவேண்டும். நாங்கள் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறோம். நினைவு கூர்வோம். எங்களுடைய சொந்த மேன்மைக்காகவும் எதிர்கால தலைமுறைகளின் மேன்மைகளுக்காகவும் நாங்கள் நினைவு கூர்வோம். இப்போதுள்ள கஷ்டமான காலகட்டத்திலும் ஓர் உலகப் பெரும் தொற்று நோயோடு நாம் மோதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் ஏக்கமும் கவலையும் மிக்க சூழலிலும் நாங்கள் இறந்த காலத்தை நினைவு கூர்வதற்கு இடம் ஒதுக்கியுள்ளோம்.

மனிதர்களால் மனிதர்களுக்கு இழைக்கப்பட்ட அழிவிலிருந்து மனித குலத்தின் இருண்ட காலத்தில் இருந்து தப்பிப் பிழைத்த பாதிக்கப்பட்ட உங்களைச் செவிமடுப்பதற்கு இடம் ஒதுக்கியுள்ளோம்’ இவ்வாறு பேசியிருப்பவர் இஸ்ரேலிய ஜனாதிபதியான ரேயுவென் ரிவ்லின். ஏற்கனவே பதிவுசெய்யப்பட்ட ஓர் உரை அது.

Advertisement

கடந்த மாதம் 22ஆம் திகதி யூதர்கள் தமது இனப் படுகொலை நாளை நினைவு கூர்ந்தார்கள். அது கொவிட்-19 உச்சமாக இருந்த காலம். இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரதானிகள் சிலருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்த காலம். எனவே நினைவுகூர்தல் பெருமளவுக்கு வேர்ச்சுவலாகவே வடிவமைக்கப்பட்டது.

இது ஈழத் தமிழர்களுக்கும் பொருந்தும். ஒரு சமூகம் பௌதிக ரீதியாக இறந்தவர்களை நினைவுகூர முடியாத காலங்களில் அதை இரண்டு விதங்களில் முன்னெடுக்கலாம். ஒன்று வேர்ச்சுவலாக. மற்றது மானசீகமாக.

யூதர்கள் இனப் படுகொலையை நினைவு கூர்வதைப் போல தமிழ் மக்களும் வேர்ச்சுவலாக நினைவுகூர்தலை ஒழுங்குபடுத்தலாம். இப்பொழுது கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளை வேர்ச்சுவலாக முன்னெடுக்கலாமா என்று பரிசோதிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தை வேர்ச்சுவலாக கூட்டுமாறு ஆலோசனை கூறப்பட்டது. அரச அலுவலர்களின் உயர்மட்டக் கூட்டங்கள் பல வேர்ச்சுவலாகவே நடக்கின்றன.

குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் தங்களுக்கு இடையேயான சந்திப்புகளையும் கருத்தரங்குகளையும் வகுப்புகளையும் வேர்ச்சுவலாகவே ஒழுங்குபடுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. எனவே கொவிட்-19 காலத்தில் தனியாள் இடைவெளிகளைப் பேணவேண்டிய ஒரு காலகட்டத்தில் சமூகத்தின் முக்கிய செயற்பாடுகள் சில வேர்ச்சுவலாக மாற்றப்பட்டிருக்கும் ஒரு சூழலில் நினைவுகூர்தலையும் தமிழ் மக்கள் வேர்ச்சுவலாக செய்யலாம்.

கொவிட்-19 அமெரிக்காவில் உச்சமாக இருந்த காலகட்டத்தில் அங்கே பெரிய வெள்ளியும் உயிர்த்த ஞாயிறும் வேர்ச்சுவலாகவே அனுஷ்டிக்கப்பப்பட்டன. அக்காலகட்டத்தில் ஆலயங்களில் மக்கள் ஒன்று கூடுவது சாத்தியமாக இருக்கவில்லை. சமூக முடக்கம் காரணமாக மக்களை ஆலயங்களில் ஒன்றுகூட வேண்டாம் என்று மத நிறுவனங்கள் அறிவித்தனர். அப்படிப்பட்டதொரு பின்னணியில் இரண்டு புனித நாட்களையும் வேர்ச்சுவலாகவே அனுஷ்டிப்பது என்று மத நிறுவனங்கள் முடிவெடுத்தன.

அந்த இரண்டு நாட்கள் மட்டுமல்லாது அக்காலகட்டத்தில் அமெரிக்காவில் ஒன்லைனில் மதத்தைப் பின்பற்றுவோர் தொகை வழமையை விட அதிகமாகக் காணப்பட்டது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் கொவிட்-19 மத நம்பிக்கைகளின் மீது கேள்விகளை எழுப்பியது. இன்னொரு புறம் அது மத நம்பிக்கைகளை அதிகப்படுத்தியது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்தவ நம்பிக்கைகளின்படி இறுதித் தீர்ப்பு நாள் வந்துவிட்டது. எனவே இறைவனைச் சரணடைந்து அதன் மூலம்தான் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று ஒரு பகுதி அமெரிக்கர்கள் நம்பத் தொடங்கினர் என்றும் அது காரணமாக அங்கே ஒன்லைன் வழிபாடுகளில் பங்குபெற்றுவோரின் தொகை அதிகரித்தது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் நினைவுகூர்தலையும் தமிழ் மக்கள் வேர்ச்சுவலாகத் திட்டமிடலாம். ஆனால் அது தாயகத்தைப் பொறுத்தவரை ஒப்பீட்டளவில் இலகுவானது அல்ல. இங்கே எல்லாரிடமும் இணையத் தொடர்பு இருக்கும் என்றில்லை. ஆனால் தாயகத்துடன் ஒப்பிடுகையில் புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பறாத விரைவான இணைய வசதிகளைக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் நினைவுகூர்தலை வேர்ச்சுவலாக திட்டமிடலாம்.

மேலும், புலம்பெயர்ந்த தமிழர்கள் வெவ்வேறு கால வலையங்களுக்குள் வாழ்கிறார்கள். எனவே வெவ்வேறு கால வலையங்களுக்குள் வாழ்பவர்கள் நினைவுகூர்தலை ஒப்பீட்டளவில் ஒரு பொது நேரத்தில் செய்வதாக இருந்தால் அதை வேர்ச்சுவலாகத்தான் செய்யலாம்.

அதேசமயம், இணையத்தள வசதிகள் ஒப்பீட்டளவில் குறைந்த தாயகத்தில் அதை எப்படிச் செய்யலாம்? அதை மானசீகமாகச் செய்யலாம். இறந்தவர்களை நினைவுகூர்வதற்கு ஒவ்வொரு மதத்திடமும் வெவ்வேறு நாட்களும் பாரம்பரியங்களும் வழமைகளும் உண்டு. சித்திரா பௌர்ணமி, ஆடி அமாவாசை, மரித்த ஆத்துமாக்கள் தினம் போன்ற பொதுத் தினங்கள் உண்டு.

அப்பொதுத் தினங்களை தமிழ் மக்கள் எவ்வாறு அனுஷ்டிக்கிறார்களோ அவ்வாறு மே-18 ஐயும் அனுஷ்டிக்கலாம். தமிழகத்துக்கும் இது பொருந்தும் அங்கேயும் பொதுவான இறந்தோர் தினங்கள் எவ்வாறு அனுஷ்டிக்கப்படுகின்றதோ அப்படியே மே -18 ஐயும் நினைவுகூரலாம்.

கடந்த 11 ஆண்டுகளில் நினைவுகூர்தல் பொருத்தமான விதங்களில் போதிய அளவுக்கு மக்கள் பயப்படவில்லை. இந்த முறையும் தாயகத்தில் வெவ்வேறு தரப்புக்கள் வெவ்வேறு விதமாக வெவ்வேறு நேரங்களில் அனுஷ்டிப்பது தெரிகிறது.

இந்தமுறை பொது ஏற்பாட்டுக் குழு ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. தமிழ் சிவில் சமூக அமையம் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டிருந்தது. விக்னேஸ்வரன் ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். தமிழரசுக் கட்சியும் ஒரு பத்திரிகை அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள். இவற்றோடு தமிழ் தேசிய மக்கள் முன்னணி களத்தில் இறங்கி ஆங்காங்கே நினைவுகூர்தலை அனுஷ்டிக்கத் தொடங்கிவிட்டது.

இப்படிப்பட்ட ஒரு பின்னணியில் இம்முறையும் ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறைக்குக் கீழ் நினைவு கூர்தலைத் தமிழ் மக்கள் முன்னெடுக்கப் போவதில்லை என்றே தெரிகிறது. எனினும் நினைவு கூர்தலுக்கான பொது ஏற்பாட்டுக் குழு, தமிழ் சிவில் சமூக அமையம், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போன்ற அமைப்புக்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் ஒரு சில பொது விடயங்களை காணக்கூடியதாக இருக்கிறது.

அதன்படி, ஒரு பொது நேரத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை ஒருவேளை உணவாகச் சமைக்க வேண்டும் என்றும் எல்லா மத வழிபாட்டு நிறுவனங்களிலும் ஒரு பொது வேளையில் மூன்று நிமிடங்களுக்கு அல்லது ஐந்து நிமிடங்களுக்கு மணி ஒலிக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.

இதுவிடயத்தில், எல்லா மதப் பிரிவுகளும் தங்களுக்கிடையே ஒரு பொது நேரமாக இரவு 6.15ஐ தேர்ந்தெடுத்திருப்பதாக யாழ். சர்வமதப் பேரவை அறிவித்திருக்கிறது. அவர்கள் அறிவித்ததன் பிரகாரம் தமிழ் பகுதி எங்கும் 6.15இற்கு ஆலய மணிகள் ஒலிக்கப்படுமாக இருந்தால் அது நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்த உதவும்.

இவ்வாறு வன்னியிலும் கிழக்கிலும் ஒழுங்குபடுத்தப்படுமா? அது மிக அவசியம். நினைவுகூர்தலை மக்கள் மயப்படுத்தாவிட்டால் அதனை கட்சிகளோ அல்லது அமைப்புக்களோ சுவீகரித்துவிடும். அது பின்னர் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்களில் சிக்கிக் கிழிந்துவிடும்.

இதுவிடயத்தில் மாவட்டங்கள் தோறும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு பொது ஏற்பாட்டுக் குழுவை பலப்படுத்துவதே நடைமுறை சாத்தியமானதாக இருக்கும். நிரந்தரமானதாகவும் இருக்கும்.

 
 

Latest News

உலக சனத்தொகை அரைப்பங்காக குறையப் போகிறது அதிர்ச்சி அறிக்கை !
சீனா இந்திய மோதல்
11 கிளைகளை மூடிய அப்பிள் நிறுவனம்!
கடந்த 24 மணித்தியாலத்தில் கனடாவில் கொரோனா தாக்கத்தால் 46பேர் உயிரிழப்பு!
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம்
கேரளாவில் உருவாகியுள்ள கொரோனா தேவி ஆலயம்!